வீடியோ காலில் பலருடன் பேச்சு: மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

அஸ்வினியின் நடத்தையில் கணவர் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Update: 2024-05-23 08:09 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 32). இவரது மனைவி அஸ்வினி(27). இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அஸ்வினியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அஸ்வினி தனது செல்போனில் வீடியோ காலில் பலருடன் பேசி வந்துள்ளார். இதுகுறித்து அஸ்வினியிடம் ரமேஷ் அடிக்கடி கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அஸ்வினி தனது கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து ரமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஸ்வினியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். இதற்கிடையே வீட்டிற்கு வந்த அஸ்வினி மறுநாள் மாயமானார். உடனே ரமேஷ் இதுபற்றி சன்னப்பட்டணா புறநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ரமேஷ் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அஸ்வினி பிணமாக கிடந்தார்.

இதுபற்றி அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ரமேஷ், தனது மனைவியை அடித்துக் கொன்று உடலை அங்குள்ள தோட்டத்தில் வீசி இலைகளை கொண்டு மறைத்து விட்டு, மனைவி மாயமானாள் என நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ரமேசை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்