9 ஆண்டுகால பாஜக ஆட்சியே மிகப்பெரிய பேரிடர்தான் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தவறான வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-12-23 08:36 GMT

சென்னை,

தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது. அப்போது, மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது.

இதற்கிடையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு இது நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை" என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

'பேரிடருக்கான நிதியை மட்டும்தான் கேட்டேன், நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பேரிடர் கால நிதி கேட்ட விவகாரத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அரசியலாக்க முற்படுகிறார்.

அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? தவறான வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.

9 ஆண்டுகால பாஜக ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதால், மழை வெள்ளத்தை தனியாக பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை.

உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டு கூறி எதையும் நான் அரசியலாக்க விரும்பவில்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்