பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார். கட்சி நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது விசாரணை நடத்தி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சியில் நடந்த முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.

Update: 2023-04-24 20:55 GMT

முப்பெரும் விழா மாநாடு

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நிரந்தர பொதுச்செயலாளர்

பேரறிஞர் அண்ணாவின் பெயரை பெற்றுள்ள அ.தி.மு.க. சாதாரண இயக்கம் அல்ல. வீழ்வது நாமாகினும், வாழ்வது இயக்கமாகட்டும். அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கு யார் வர வேண்டும்? என்று ேதர்ந்தெடுக்கும் பொறுப்பை தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார். அதை ஜெயலலிதா உரிமையாக்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தினார்கள். இதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்றது.

எம்.ஜி.ஆர். மறைந்தபோது, இந்த இயக்கத்தின் தொண்டர்கள் 16 லட்சம் பேராக இருந்தனர். அதை ஜெயலலிதா 1½ கோடி தொண்டர்களை கொண்ட எக்கு கோட்டையாக மாற்றினார். தொண்டர்களாகிய நீங்கள்தான் இந்த இயக்கத்தை தாங்கி பிடித்து கொண்டு இருக்கிறீர்கள். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என உண்மையான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை ஓட, ஓட விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தலைமை பொறுப்பு

என்னை 2 முறை ஜெயலலிதா முதல்-அமைச்சராக நியமனம் செய்தார். 3-வது முறை சசிகலாதான் என்னை முதல்-அமைச்சர் ஆக்கினார். அந்த பதவியை திரும்ப கேட்டார்கள். நான் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. உங்களின் ஒருவனாக தொண்டனாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். எம்.ஜி.ஆர். வழியில் தொண்டர்களாகிய உங்களில் ஒருவரை கழகத்தின் தலைமை பொறுப்புக்கு உட்கார வைக்க வேண்டிய தலையாய கடமை எங்களுக்கு இருக்கிறது.

ஜெயலலிதா எனக்கு முதல்-அமைச்சர், நிதி அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், கழக பொருளாளர் போன்ற பதவிகளையெல்லாம் தந்து இருக்கிறார். நான் பொருளாளராக இருந்தபோது ரூ.2 கோடி பற்றாக்குறையில் கட்சி நிதி இருந்தது. அதை ரூ.256 கோடியாக ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். எனக்கு இருக்கிற பயமே, இன்று நயவஞ்சகத்தால் பதவிகளை கையில் வைத்து கொண்டு சட்டத்தின் மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் இன்று ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

விசாரணை நடத்தி நடவடிக்கை

உண்மையில் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கழகத்தின் நிதியில் ஒரு நயாபைசாகூட செலவழிக்கக்கூடாது. அந்த நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நிச்சயம் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். எனக்கு தந்த பதவியை நான் திரும்ப கொடுத்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கு யார்? பதவி கொடுத்தது. சசிகலா உங்களுக்கு பதவியை கொடுத்தார். அவர்களை பார்த்து தவறாக பேசி இருக்கிறார்.

அது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். வரலாறு உங்களை மன்னிக்குமா?. உலகத்திலேயே ஒரு கட்சியில் தலைமை பொறுப்புக்கு தான் தேர்தல் நடக்கும். அதையெல்லாம் மாற்றியுள்ளார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பச்சை துரோகம் செய்த நம்பிக்கை துரோகியை நமது இயக்கத்தில் தொடர்ந்து இருக்க விடலாமா? என தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும்.

மிட்டா மிராசுகளும், ஜமீன்தார்களும் தான் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று சட்டவிதியை திருத்திய எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை துரோகத்துக்கு சாவுமணி அடித்தே ஆக வேண்டும். அதை செய்து முடிக்கிற ஆற்றல் உங்கள் இடத்தில் உள்ளது. எங்களுக்கு எல்லா பதவியையும் ஜெயலலிதா வழங்கிவிட்டார்.

தொண்டன்

ஒரு தொண்டன் தான் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். ஒரு தனிமனித ஆதிக்கத்தில் இந்த இயக்கம் சென்றுவிடக்கூடாது. ஜனநாயக முறையில் இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெறுகிற இயக்கமாக இருக்க வேண்டும். அது தான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் நாம் செய்கிற நன்றி கடனாக இருக்க வேண்டும். தொண்டர்களின் உழைப்பு எங்களுக்கு தேவை. தாக்குதல்களை நாங்கள் தாங்கி கொண்டு தொண்டர்களை பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் இ.ஏ.ரத்தினசபாபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானம்

மாநாட்டில் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரே 2026-ம் ஆண்டு வரை முழு பொறுப்புகளையும் மேற்கொள்வார் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்