தனி நபர் குறித்த விமர்சனத்தை தமிழர்களை நோக்கி பேசியதாக திரித்து கூறுவதா? -தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

காங்கிரசை சேர்ந்த சாம் பிட்ரோடா, தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்களை எல்லாம் ஆப்பிரிக்க இனத்தை சார்ந்தவர்கள் போல் கருப்பாக உள்ளனர் என்று கூறினார்.

Update: 2024-05-22 13:51 GMT

சென்னை,

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னரும், தென்சென்னை பா.ஜனதா வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 'ஒடிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தில் இல்லாமல், அதிகாரியாக இருந்துகொண்டு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஒருவர், மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் தடுக்கிறார்' என்ற உண்மை நிலையை கூறினார். அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால், ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்துவிட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரித்து கூறுவது, தமிழர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் அவமானப்படுத்துகிறார் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காங்கிரசை சேர்ந்த சாம் பிட்ரோடா, தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்களை எல்லாம் ஆப்பிரிக்க இனத்தை சார்ந்தவர்கள் போல் கருப்பாக உள்ளனர் என்று கூறினார். அப்போது, தி.மு.க.வினர் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்தார்கள். ஆனால், இன்று ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழரை குறிப்பிட்டதற்கே எல்லா தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழினத்தை அவமானப் படுத்திவிட்டார் பிரதமர் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார்கள்.

பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவி, திறப்பு விழாவுக்கு தமிழக ஆன்மீக பெரியவர்களை அழைத்து கவுரவித்து தமிழ்நாட்டின் பெருமையை நிலை நிறுத்தியவர்.

பிரதமரின் தமிழ்ப்பற்று என்பது உண்மையான தமிழ்ப்பற்று. இதை பொறுத்து கொள்ள முடியாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கும் பிரதமருக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு தனிநபரை குறிப்பிட்டு பேசியதை ஒட்டுமொத்த தமிழர்களையும் பேசியதாக திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமர் குறித்து பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்