தவறி விழுந்த கபடி வீரர் பலி

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கபடி வீரர் பலியானார்.

Update: 2023-07-31 19:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. அவருடைய மகன் ஆதிசிவகுரு நாதன் (வயது 17). கபடி வீரரான இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய நண்பர்கள் கண்ணன் (16), சாரதி (14). இதில் கண்ணன், விளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் சாரதி, 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவர்கள் 3 பேரும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் விளாம்பட்டியில் இருந்து இரும்பாடி நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

விளாம்பட்டி அருகே உள்ள ஓடை பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆதிசிவகுருநாதன் பரிதாபமாக இறந்தார். கண்ணன், சாரதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்