'தீ பரவட்டும்..' கெஜ்ரிவாலின் பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

சட்டமன்றத்தின் இறையாண்மையே ஜனநாயகத்தில் முதன்மையானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-16 06:12 GMT

சென்னை,

பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், "சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பதில் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், "கவர்னர்களும், துணைநிலை கவர்னர்களும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை வேண்டுமென்றே பலவீனப்படுத்துவதுடன், தங்கள் விருப்பத்துக்கு நிர்வாகத்தை தடுக்கின்றனர்.

இத்தகைய போக்குக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டசபைக்கு பாராட்டுக்கள். இதே போன்றதொரு தீர்மானம், டெல்லி சட்டசபையிலும் கொண்டுவரப்படும்" என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சட்டமன்றத்தின் இறையாண்மையே ஜனநாயகத்தில் முதன்மையானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டம் இயற்றும் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளில் நியமன கவர்னர்கள் ஈடுபடக் கூடாது. தீ பரவட்டும். " என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்