வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், தாஞ்சூர் அருகே செம்படா வயல் இசுகுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரிடம் அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஷ் அத்துமீறி நுழைந்து மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார்.
இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேசை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
7 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். இதில் விக்னேசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த 2 தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட விக்னேசை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.