'தி கேரளா ஸ்டோரி' ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி

'தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-22 02:55 GMT

 

சென்னை,

'தி கேரளா ஸ்டோரி ' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி வெளியானது. சுதிப்தோ சென் இயக்கத்தில் ஆதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, தேவதர்சினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் கேரளாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம், கேரளாவின் பிற மதப்பெண்களை மதமாற்றம் செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியான நிலையில் தற்போது வரை இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதேவேளை வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாக இந்த படத்துக்கு மேற்கு வங்காளத்தில் தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு இல்லை என கூறி தமிழ்நாட்டில் தியேட்டர்களில் இருந்து இந்த திரைப்படம் நீக்கப்பட்டது.

மேற்குவங்காளத்தில் விதிக்கப்பட்ட தடையையும், தமிழ்நாட்டில் திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டதையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 'தி கேரளா ஸ்டோரி ' படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தப் படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அத்துடன், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படவில்லை என்ற பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், படம் பார்க்கச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் நேற்று தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார். நுங்கப்பாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார்.

இந்த படத்தை பார்த்த பின் கவர்னர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்