அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ராஜினாமா

ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

Update: 2024-03-12 06:16 GMT

சண்டிகார்,

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எனினும், கூட்டணி கட்சிகளின் உதவியுடனேயே அரசு நடந்து வரும் சூழலில், அதில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.

ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.

இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான நயன் பால் ரவாத் இன்று கூறும்போது, கூட்டணி முறிவுக்கான சாத்தியம் காணப்படுகிறது. எனினும், சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எம்.எல். கட்டாருக்கும், அரசுக்கும் ஆதரவு தருவார்கள் என கூறினார்.

பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என வெளியான தகவலை முன்னட்டு அரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை முன்னிட்டு, தருண் சக் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அரியானாவுக்கு விரைந்துள்ளனர். அக்கட்சியின் சட்டமன்ற கட்சி கூட்டமும் இன்று நடைபெற கூடும் என கூறப்பட்டது.

இந்த சூழலில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய மந்திரி சபையை சேர்ந்த சகாக்களுடன் சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அதற்கான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். உடனடியாக அவரது மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அமைச்சரவை கலைக்கப்பட்டு உள்ளது. அடுத்து அரியானா முதல்-மந்திரியாக பதவியேற்பது யார்? என்ற பரபரப்பு காணப்படுகிறது.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கூட்டணிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 7-ல் 6 பேர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்தியன் லோக் தளம் மற்றும் அரியானா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். இதனால், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதுடன் மனோகர் லால் கட்டார் மீண்டும் முதல்-மந்திரியாவதற்கான சூழலும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்