"ரத்தம் குடிக்கும் காட்டேரி".. வருங்கால கணவர் பயப்படுவாரா?- கல்யாணி சொன்ன பதில்
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சாப்டர் 1-சந்திரா படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது.;
சென்னை,
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோயினாக நடித்த படம் லோகா சாப்டர் 1-சந்திரா. படம் திரைக்கு வந்து 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் நடந்த விழாவில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சந்து சலீம் குமார், இயக்குனர் டோமினிக் அருண், ஏ.ஜி. எஸ்.ஐஸ்வர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
படத்தில் பிரபல டைரக்டர் பிரியதர்ஷன், நடிகை லிசி ஆகியோரின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து கல்யாணி பிரியதர்ஷனிடம் இந்த சின்ன வயதிலேயே ரத்தம் குடிக்கும் காட்டேரியாகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் தைரியமாக நடித்துள்ளீர்களே! வருங்காலத்தில் உங்களது கணவர் படத்தை பார்த்தால் எப்படி பீல் பண்ணுவார்? அதைப்பற்றி நினைத்து பார்த்தீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கல்யாணி பிரியதர்ஷன், “அதைப்பற்றி நினைத்து பார்க்கவில்லை. அப்பாவிடம் சொன்ன போது கூட நீ ஆக்ஷன் காட்சியில் நடிக்க போகிறாயா? கால், கையெல்லாம் ஒழுங்கா பார்த்துக்கொள் என்று மட்டும்தான் சொன்னார். அதை தாண்டி நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அவர் பேசுகையில், “படத்துக்கு இந்த அளவுக்கு பாராட்டும் வெற்றியும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ரூ.100 கோடி வசூலை படம் பெற்றுள்ளது. இதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. ஒட்டு மொத்த படக்குழுவினர் அனைவரது உழைப்பும்தான் காரணம்” என பேசினார்.