2-வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை?
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்;
சென்னை,
பிரபல நடிகை எஸ்தர் நோரோன்ஹா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை எஸ்தர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது 2-வது திருமணத்தைப் பற்றியதாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர்.
எஸ்தர் நோரோன்ஹா தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ''மீன் குழம்பும் மண் பானையும்'', ''கேம் ஆப் லோன்ஸ்'', ''வெட்டு'' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் பிரபல பாடகர் நோயலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு என் "புதிய அறிவிப்பு" என்ற தலைப்பில் எஸ்தர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "கடவுள் என் வாழ்க்கையில் இன்னொரு அழகான ஆண்டை எனக்குக் கொடுத்திருக்கிறார். எனக்கு அற்புதங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியதற்காக இதயத்தின் ஆழத்திலிருந்து கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என் பிறந்தநாளில் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்த உங்கள் அனைவருக்கும் நன்றி . உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு "புதிய அறிவிப்பு" உள்ளது அதை விரைவில் அறிவிப்பேன், காத்திருங்கள் " என்று தெரிவித்தார். இது அவரது 2-வது திருமணம் பற்றியதாக இருக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.