நான் எடுத்த தவறான முடிவால் என் வாழ்க்கையே மாறிவிட்டது - சோனியா அகர்வால்

திருமணத்தால் என் வாழ்க்கையே நிலைதடுமாறிவிட்டது என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.;

Update:2025-08-23 22:06 IST

கோப்புப்படம் 

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நடித்த ‘காதல்கொண்டேன்' திரைப்படம் மூலம் சினிமாவில் புகழை எட்டியவர் சோனியா அகர்வால். தொடர்ந்து ‘கோவில்', ‘7ஜி ரெயின்போ காலனி', ‘திருட்டுப் பயலே', ‘புதுப்பேட்டை' போன்ற படங்களில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே, இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவில் இருந்தும் ஒதுங்கினார்.

சில வருடங்களிலேயே திருமண பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவர், மீண்டும் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். ஆனாலும் முன்பு தொட்ட புகழை அவரால் அடைய முடியவில்லை. இப்போது சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சோனியா அகர்வால் ஒரு பேட்டியில் கூறும்போது, “நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, திருமணம் காரணமாக ஒரு பிரேக் எடுத்தேன். அது என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பிழை என்று இப்போது கருதுகிறேன். ஏனெனில் ‘புதுப்பேட்டை' நடித்து முடித்த நேரத்தில் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.

அந்த இரண்டு படங்களும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தன. அந்தப் படங்களில் நான் நடித்திருந்தால், இப்போது என் வாழ்க்கையே வேறு விதமாக அமைந்திருக்கும். திருமணத்தால் என் வாழ்க்கையே நிலைதடுமாறிவிட்டது” என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்