திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவிற்காக கடந்த சில தினங்களாக திருமலையில் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் வாகன சேவைகள் பிரமாண்டமாக நடைபெறும். இதனைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பத்கர்கள் மாட வீதிகளில் திரள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 இடங்களில் அகண்ட ஒளித்திரைகள் நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 3 ஆயிரம் உயர் தெளிவு திறன் கொண்ட கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற்றது. கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்பட்டன. நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. புற்றுமண் எடுத்து பூஜை செய்து, புற்றுமண்ணில் முளைப்பாரிக்காக நவதானிய விதைகள் தூவப்பட்டன.
இந்நிலையில், பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிரம்மோற்சவ விழா இன்று மாலையில் தொடங்கியது. மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழாவிற்கான கருடக்கொடி ஏற்றப்பட்டது.
பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் இரு வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, 28-ம் தேதி நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மாட வீதிகளில் பவனி வரும் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கருட சேவை, தங்கத் தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.