தீபாவளி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்கவேண்டும்.;
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளை (20.10.2025) கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த நன்னாளில் செய்யவேண்டிய பூஜைகளை பார்ப்போம்.
லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிக மிக சிறப்பு வாய்ந்தது. குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.
தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.
தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்கவேண்டும்.
குலதெய்வ வழிபாடு
எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும், அவை எதுவும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது. குலதெய்வத்தை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்து விடும். ஒருவரின் குடும்பம் சீராகவும், நல்ல முறையிலும், சச்சரவுகள் இன்றியும் நடைபெற குலதெய்வத்தின் ஆசிர்வாதம் அவசியமானது. எனவே எந்த பண்டிகையாக இருந்தாலும், வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து, முதலில் குல தெய்வத்தை வணங்கி விட்டு, பிறகு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது. அந்த வகையில் நாளை தீபாவளி கொண்டாட்டத்தின் துவக்கமாக குலதெய்வ வழிபாடு சிறந்தது. முடிந்தவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதபட்சத்தில் வீட்டில் பூஜை செய்தால் போதுமானது.
கேதார கௌரி விரதம்
தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.
தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.