திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்துக்கு விரிவான ஏற்பாடுகள்
கருட சேவையை முன்னிட்டு 27-ந்தேதி இரவு 9 மணியில் இருந்து 29-ந்தேதி மாலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்காக செய்யப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகள் குறித்து திருமலை அன்னமய பவனில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை அறங்காவலர் குழு தலைவர் தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்காலுடன் சேர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 23-ந்தேதி இரவு 7 மணிக்கு அங்குரார்ப்பணம், 24-ந்தேதி மாலை 5.43 மணியில் இருந்து 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு மூலவருக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகன சேவையில் முதல்-மந்திரி பங்கேற்கிறார். 25-ந்தேதி பி.ஏ.சி-5 வெங்கடாத்ரி நிலையம் திறக்கப்படுகிறது. 2026-ம் ஆண்டு காலண்டர், டைரிகள் வெளியிடப்படுகின்றன.
இருசக்கர வாகனங்களுக்கு தடை
இஸ்ரோ உதவியோடு செயற்கைக்கோள் மூலமாகப் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படுகிறது. பூ அலங்காரம், அகண்ட ஒளித்திரை அமைப்பது, தோரணங்கள் கட்டுவது போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
23-ந்தேதியில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி வரை முதியோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ), 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் நியமன பிரமுகர்களுக்கே வழங்கப்படுகிறது.
பக்தர்களுக்கு தினமும் 8 லட்சம் லட்டுக்கள் வழங்கப்படும். கருட சேவையை முன்னிட்டு 27-ந்தேதி இரவு 9 மணியில் இருந்து 29-ந்தேதி மாலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மலர் கண்காட்சி
28-ந்தேதி நடைபாதைகள் முழு நேரமும் திறந்திருக்கும். பல்வேறு இடங்களில் கூடுதலாகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும், சிறுவர்களுக்கு ‘ஜியோ டேக்கிங்’ கயிறு கட்டப்படும், தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. ஹெச்.டி. தரத்தில் நேரலையில் பக்தி சேனலில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுகிறது. கருடசேவை நாளில் 4 லட்சம் மோர் பாக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். மலர்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவைகளாலும், புகைப்படங்களாலும் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.