12 பேர் விடுதலை; உண்மையான குற்றவாளிகள் யார்? - மும்பை குண்டுவெடிப்பில் மகளை இழந்த தந்தை வேதனை
கொரோனாவால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் எஞ்சிய 11 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் ரெயில்களில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்தனர். மேலும் 820 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான லஷ்கர்-இ-குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குட்புதின் சித்திக், நவீத் ஹசன் கான், ஆசீப் கான், தன்வீர் அகமது, முகமது மஜித், ஷேக் முகமது அலி, முகமது சஜித், ரகுமான் ஷேக், ஷாகில் முகமது, சமீர் அகமது ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 12 பேரும் குற்றவாளிகள் என்று 2015-ம் ஆண்டு மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், குற்றவாளி கமல் அன்சாரி கடந்த 2021-ம் தேதி கொரோனாவால் நாக்பூர் சிறையில் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. கொரோனாவால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் எஞ்சிய 11 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், 2006 மும்பை ரெயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனது மகளை இழந்த ரமேஷ் நாயக், கோர்ட்டின் உத்தரவு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசாங்கத்திடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஏன் 19 ஆண்டுகள் ஆனது? ஒரு முடிவை எட்டுவதற்கு 19 ஆண்டுகள் ஆனது ஏன்?
2008-ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக அஜ்மல் கசாப் விரைவாக தூக்கிலிடப்பட்டார். ஆனால் 19 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்த பயங்கரவாதிகள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லையென்றால், ரெயிலில் குண்டுவெடிப்பை ஏற்படுத்திய உண்மையான குற்றவாளிகள் யார்? கோர்ட்டின் தீர்ப்பு வேடிக்கையாக உள்ளது" என்று தெரிவித்தார்.