ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வீசிய 413 டிரோன்கள் அழிப்பு - எல்லை பாதுகாப்பு படை தகவல்

டிரோன்களால் இந்தியாவில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.;

Update:2025-05-27 03:04 IST

ஜெய்ப்பூர்,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வீசிய 413 டிரோன்கள் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜெய்சால்மர், பார்மர், பைகானேர் மற்றும் கங்காநகர் ஆகிய பகுதிகளின் மீது இந்த டிரோன்கள் வீசப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையின் ராஜஸ்தான் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.எல்.கார்க் தெரிவித்துள்ளார்.

இந்த டிரோன்களால் இந்தியாவில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், அவை இந்திய மண்ணை தொடுவதற்கு முன்பாகவே இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறித்து அழித்ததாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் சில இடங்களில் சிறிய அளவில் கட்டிட சேதங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்