பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு குறைவாக இருக்கக்கூடாது - சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு ஆலோசகர் வலியுறுத்தி இருந்தார்.;

Update:2025-07-25 11:56 IST

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசுக்கும், நிபுன் சக்சேனா என்பவருக்கும் இடையிலான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எழுத்துப்பூர்வமாக தனது கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்திரா ஜெய்சிங் கூறியிருப்பதாவது:-

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயதுவரம்பு 70 ஆண்டுகளாக 16 வயதாக இருந்தது. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் திருத்த சட்டத்தில், அந்த வயது 18 ஆக உயர்த்தப்பட்டது.

எந்த விவாதமும் நடத்தாமலும், நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராகவும் 18 வயதாக உயர்த்தப்பட்டது. பகுத்தறிவுடன் கூடிய காரணங்களோ, புள்ளிவிவரங்களோ இல்லாமல் வயது உயர்த்தப்பட்டது.

தற்போது, இளம் வயதினர் முன்கூட்டியே பருவம் எய்தி விடுகிறார்கள். தங்கள் விருப்பம்போல், காதல், பாலியல் உறவை தீர்மானிக்கும் திறனை பெற்றுள்ளனர். பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் அவர்களின் சுதந்திரம், முதிர்ச்சி, திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அவர்களுக்கிடையிலான பாலியல் உறவை பாலியல் குற்றமாக தற்போதைய சட்டம் வகைப்படுத்துகிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மற்றும் அறிவியல், சமூக புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் சம்பந்தப்பட்ட 'போக்சோ' வழக்குகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான புகார்கள், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் விருப்பம் இன்றி, மாற்று சாதி, மதம் என்ற அடிப்படையில், அவர்களது பெற்றோரால் அளிக்கப்படுகின்றன.

சம்மதத்துடன்கூடிய அந்த வயதினரின் பாலியல் உறவை குற்றமாக்குவது அவர்களை ஓடிப்போகவும் அல்லது சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வைத்து விடும். கல்வி பாதிக்கப்படும். எனவே, 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரின் காதல், பாலியல் உறவுகளை 'போக்சோ' சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் 375-வது பிரிவு ஆகியவற்றின்கீழ், ஒட்டுமொத்தமாக குற்றமாக்குவது தவறு. அது அரசியல் சாசனத்துக்கும், அந்த குழந்தைகளின் நலன்களுக்கும் எதிரானது.

ஆகவே, சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு மறுஆய்வு செய்து, பரஸ்பர சம்மதத்துடன்கூடிய பாலியல் உறவுக்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும். அவர்கள் மீது போக்சோ, இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

'போக்சோ' வழக்குகளில், எடுத்தவுடனே சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை சுப்ரீம் கோர்ட்டும், மும்பை, சென்னை, மேகாலயா ஆகிய ஐகோர்ட்டுகளும் நிராகரித்துள்ளன. கட்டாய உறவையும், சம்மதத்துடன்கூடிய உறவையும் சட்டம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

பாலியல் சுதந்திரம் என்பது மனித கவுரவத்தின் ஒரு அங்கம். தனது உடல் தொடர்பாக தனக்கு விருப்பமான முடிவை எடுக்க இளம் வயதினருக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்தின் 14,15,19,21 ஆகிய பிரிவுகளை மீறிய செயல் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு குறைவாக இருக்கக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி பாலியல் உறவுக்கான சம்மத வயதை 18-லிருந்து குறைப்பது சாத்தியமில்லை என்று மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது.

மேலும் இந்திய சட்டத்தின் கீழ் பாலியல் உறவுக்கான சம்மத வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இது குழந்தைகளுக்கான ஒரு பேரம் பேச முடியாத பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, கவனமாகக் கருதப்பட்ட சட்டமன்ற தேர்வு என்றும், இது இந்திய அரசியலமைப்பின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உள்ளார்ந்த பாதுகாப்பில் இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்