ஏர் இந்தியா விமான விபத்து; முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
விமான விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், எரிபொருள் ஸ்விட்ச் கோளாறால் விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த எரிபொருள் ஸ்விட்சை ‘ஹனிவெல்’ என்ற நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் குடும்பத்தினர் அமெரிக்காவின் டெலாவேர் மாகாண கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில், தங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் விமானத் தரவுப் பதிவு (FDR), நேரக் குறிப்புகளுடன் கூடிய விமானி அறை குரல் பதிவு (CVR) டிரான்ஸ்கிரிப்ட் மற்றும் மின்னணு விமானப் பிழைப் பதிவு (EAFR) உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பத் தரவுகளையும் வெளியிட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம்(AAIB) கடந்த ஜூலை 12-ந்தேதி வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விபத்து தொடர்பான முழு தரவுகள் வெளியிடப்படவில்லை எனவும், அத்தகைய தகவல்களை மறைப்பது வெளிப்படைத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்றும், 260 உயிர்களை பலி கொண்ட விபத்துக்கான காரணங்களை துல்லியமாக கண்டறிவதை தடுக்கிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.