அமெரிக்காவுக்கு அனைத்துவகை தபால் சேவைகளும் நிறுத்தம்: தபால்துறை அறிவிப்பு

அமெரிக்காவுக்கு அனைத்துவகை தபால் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தபால்துறை அறிவித்துள்ளது.;

Update:2025-09-01 07:30 IST

புதுடெல்லி,

ஆகஸ்டு 29-ந் தேதியில் இருந்து 100 டாலருக்கு மேல் மதிப்புடைய பொருட்கள் அமெரிக்காவுக்கு வரும்போது சுங்க வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூலை 30-ந் தேதி அமெரிக்க அரசு நிர்வாக உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இருப்பினும், இப்பிரச்சினையில் நிலவிய தெளிவின்மை காரணமாக, அமெரிக்கா செல்லும் விமானங்கள், அமெரிக்காவுக்கான தபால்சேவைகளை ஏற்க முடியாது என்று அறிவித்தன. அதன் அடிப்படையில், இந்திய தபால்துறை, 100 டாலருக்கு மேல் மதிப்புடைய பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 23-ந் தேதி அறிவித்தது.

இந்நிலையில், அனைத்துவகையான தபால்சேவைகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக தபால்துறை நேற்று அறிவித்தது. இதுகுறித்து தபால்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான தபால் முன்பதிவு நிறுத்தம் குறித்து மறுஆய்வு செய்தோம். அமெரிக்கா செல்லும் விமானங்கள் தபால்களை ஏற்க மறுப்பதாலும், தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும் அமெரிக்காவுக்கு கடிதங்கள், ஆவணங்கள், பரிசு பொருட்கள் உள்பட அனைத்துவகையான தபால்சேவைகள் முன்பதிவையும் முழுமையாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்பதிவு செய்தும், அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாத பொருட்களுக்கான தபால் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தபால்சேவையை விரைவிலேயே கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்