பிரம்மோஸ் ஏவுகணை பற்றி பாகிஸ்தான் மக்களிடம் கேளுங்கள் - யோகி ஆதித்யநாத்
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகிற்கு தனது பலத்தை காட்டி உள்ளது என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் சக்தியை நாம் பார்த்தோம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பாகிஸ்தான் மக்களிடம் போய் அதைப் பற்றிக் கேளுங்கள். எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இப்போது போர்ச் செயலாகக் கருதப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை, பிரச்சினை தீர்க்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் நாம் அனைவரும், முழு தேசமும் பிரதமர் மோடியின் தலைமையில் ஒரே குரலில் ஒன்றுபட்டு இந்தப் பிரசாரத்தை ஆதரிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகிற்கு தனது பலத்தை காட்டியது. பயங்கரவாத செயலுக்கு அதன் சொந்த மொழியில் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.