கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சி: தந்தை உள்பட 3 பேர் கைது

கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-10-27 18:57 IST

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கும்மணம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை ஒரு தம்பதி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 2½ மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது.

இதேபோல் ஈராட்டுப்பேட்டையை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஒன்றில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தம்பதி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் அவர்கள் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு அறிமுகமான ஒருவர், தனக்கு தெரிந்த கும்மணம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அசாம் மாநில தம்பதியிடம் ஆண் குழந்தை உள்ளது, அவர்களிடம் பேசி பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர், அசாம் மாநில தம்பதியிடம் பேசி குழந்தையை பணம் கொடுத்து வாங்க முயற்சித்தார். ஆனால் அதற்கு குழந்தையின் தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது கணவர், குழந்தையை விற்க முடிவு செய்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்க அதன் தந்தை பேரம் பேசினார். பின்னர் அதற்கு முன்பணமாக ரூ.1,000-த்தை குழந்தையின் தந்தை பெற்றுக்கொண்டார்.

இதையறிந்த குழந்தையின் தாய், கணவருடன் மேலும் தகராறு செய்ததுடன் நடந்த சம்பவங்களை தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கோட்டயம் கிழக்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோட்டயம் போலீசார் விசாரணை நடத்தி, ரூ.50 ஆயிரத்திற்கு 2½ மாத ஆண் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற தந்தை, இடைத்தரகராக செயல்பட்ட நபர் மற்றும் அந்த குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி என 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்