மரத்தில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு

கர்நாடகாவில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update:2025-08-04 20:59 IST

கோப்புப்படம் 

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீர்த்தஹள்ளி தாலுகா ஹல்யாபுரா கிராமத்தை சேர்ந்தவர் குண்டா நாயக் (72 வயது). இவரது மனைவி லட்சுமியம்மா (58 வயது). இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வீடு கட்டுவதற்காக தங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. குண்டா கடன் தொகைக்கு வட்டி செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் குண்டா மற்றும் அவரது மனைவியிடம் கடனை திரும்ப கேட்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நபர் வீட்டிற்கு வந்து குண்டா, லட்சுமியம்மா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர்கள் கிராமம் அருகே உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து மாளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்