ஆந்திராவில் பஸ் தீ விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது;

Update:2025-10-24 10:30 IST

டெல்லி,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த பைக் மீது ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பஸ் முழுவதும் மளமளவென பரவிய நிலையில் அதில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். பல பயணிகள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சிலரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஆந்திர மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட பஸ் தீ விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பஸ் தீ விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஆந்திர மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட பஸ் தீ விபத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு நான் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்