டெல்லி: அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்திப்பு

டெல்லியில், மத்திய மந்திரி அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் வைத்து, தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.;

Update:2025-09-16 20:40 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் கடந்த 8-ந்தேதி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நான் கோவிலுக்கு செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். எனது பயணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார் என தகவல் வெளியானது. அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது என கூறப்பட்டது.

இதன்பின்னர், தமிழகம் திரும்பிய அவர் கூறும்போது, ஹரித்வார் செல்வதாக கூறினேன். அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதனால், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றிய கருத்துகள் அப்போது பரிமாறப்பட்டன. அ.தி.மு.க. இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்தேன். மக்கள் பணி, இயக்கம் வலிமைபெறவும் பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் என கூறினார்.

இந்நிலையில், டெல்லியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் வைத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தமிழக சட்டசபை தேர்தல், கூட்டணி உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய ஒரு வாரத்திற்குள், எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்