முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிங்கப்பூரில் முப்படை தலைமை தளபதி வெளியிட்ட தகவல்களை பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.;

Update:2025-06-02 08:50 IST

புதுடெல்லி,

சிங்கப்பூர் சென்றிருந்த முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து சில தகவல்களை வெளியிட்டார். அப்போது அவர், விமானப்படைக்கு தொடக்கத்தில் சிறிய இழப்புகள் ஏற்பட்டாலும், பின்னர் தவறுகளை திருத்திக்கொண்டு பாகிஸ்தான் நிலப்பரப்பில் தொலை தூரத்துக்கு சென்று தாக்கியதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிய தகவல்களையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

முப்படை தலைமை தளபதியின் இந்த பேட்டியை தொடர்ந்து, இது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிங்கப்பூரில் அனைத்து இடங்களிலும் முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இது கவலை அளிக்கிறது. சிங்கப்பூரில் கூறிய கருத்துகளை பிரதமரோ அல்லது ராணுவ மந்திரியோ எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்து இருக்க வேண்டும். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமரோ அல்லது ராணுவ மந்திரியோ இதை முதலில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.ராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கைகள் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப்பிந்தைய பொருளாதார பிரச்சினைகளை விவாதிக்க உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தேவையை அனில் சவுகானின் கருத்துகள் மேலும் வலுப்படுத்தி இருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் ராணுவ தயார்நிலை மற்றும் வியூகம் குறித்து விவாதிக்கவும், அனைத்துக்கட்சிகளுக்கும், நாட்டுக்கும் அரசு நம்பிக்கை ஏற்படுத்தவும் வேண்டும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில், 'அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தவுடனே, தலைவர்களும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வெளிநாடு சென்றுள்ளனர். கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? பதில்கள் ஆயுதப்படைகளிடம் இருந்து வரக்கூடாது, அரசிடம் இருந்து வர வேண்டும்' என தெரிவித்தார். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? சண்டை நிறுத்தத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய அவர், முப்படை தலைமை தளபதி கூறியதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்ற சிறப்பு அமர்வை கூட்டி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: "எப்படி, எப்போது பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். தேசிய விவகாரங்களில் ஒற்றுமை அவசியம். எதிரிகளை வீழ்த்துவதில்தான் ஒற்றுமை இருக்க வேண்டும். ஆபரேசன் சிந்தூர் விவகாரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்