நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.;

Update:2025-11-21 04:39 IST

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் சிந்தகாணி மண்டலம் நேரடா கிராமத்தை சேர்ந்தவர் கோகுல சாய்வாணி (வயது 36). கணவர் பாஸ்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மகன்-மகளுடன் கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒரு கல்யாண மண்டபத்தில் கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார். நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர், நேற்று நேரடா கிராமத்திலிருந்து வந்து சாய்வாணி தங்கியிருந்த வீட்டின் அருகே பதுங்கி இருந்தார். அப்போது சாய்வாணி திருமண மண்டபத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அவர் வருகைக்காக மறைந்தபடி காத்திருந்த பாஸ்கர், திடீரென சாய்வாணி மீது பாய்ந்து மடக்கிப்பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து விட்டார். இதனால் சாய்வாணி அலறித் துடித்தார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு மகள் ஹர்ஷவர்த்தினி வீட்டுக்குள் இருந்து ஓடி வந்தார். அவர் கத்தியுடன் நின்ற தந்தையை தடுக்க முயன்றதால் மகளையும் பாஸ்கர் கத்தியால் குத்தினார். இதனால் அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கழுத்து அறுபட்டதில் சரிந்து விழுந்த சாய்வாணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்தபடி உயிரைவிட்டார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த ஹர்ஷவர்த்தினியை கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாய்வாணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தலைமறைவான பாஸ்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்