கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுராக் தாக்கூர் கடிதம்

கரூரில் உள்ள சூழ்நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-03 12:45 IST

புதுடெல்லி,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து விரிவான விசாரணை நடத்த நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க பாஜக குழு ஒன்றை அமைத்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைபடி 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி,ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பின்னர் அவர்கள் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், “இங்கே உளவுத்துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது? விஜய் தாமதமாக வந்தார் என்றால்... ஏற்கெனவே ஆயிரக்கணக்கானவர்கள் கூடிவிட்டார்கள். அதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது? மாவட்ட நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பல தீவிரமான கேள்விகள் எழுகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு அருகில் நிற்பது மிகவும் கடினமான ஒன்று. ஒன்றரை வயது குழந்தை ஒன்று தன் அத்தையின் கைகளில் மரணமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் (பாஜக குழு) கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களே,

கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரின் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பாக எட்டு (8) பேர் கொண்ட குழு, துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அவர்களின் மனதில் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்த சூழ்நிலைக்கு முழுமையாக பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. சம்பவத்திற்கான முதன்மை காரணங்கள்: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?

2. கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்: நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

3. காரண பகுப்பாய்வு: ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சோகத்திற்கு பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளதா, மேலும் அதன் கண்டுபிடிப்புகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

NDA குழுவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு, கரூர் மாவட்ட மாவட்ட கலெக்டருக்கு ஒரு நகலுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருடன் பகிர்ந்து கொண்ட கடிதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பொறுப்புணர்வையும் பொறுப்பையும் சரிசெய்து, பொதுமக்களின் கேள்விகளுக்கு தீர்வு காணும் வகையில், துறை வாரியாக விரிவான பதில்களைக் கடிதம் கோருகிறது. இந்த அவசர விஷயத்தில் சரியான நேரத்தில் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்