கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: போலீசாரின் கட்டாயத்தால் தான் விஜய் வெளியேறினார் - சுப்ரீம்கோர்ட்டில் தவெக தரப்பு வாதம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம்? என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.;

Update:2025-10-10 12:53 IST

புதுடெல்லி,

கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதுதொடர்பான அந்த மனுவில், “கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித்தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக ஐகோர்ட்டு கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது. இவை விஜய், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது. த.வெ.க. தரப்பு கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு சில ரவுடிகளால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியே காரணம் என்பதை மறுக்க முடியாது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரூர் சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என நேற்று முன்தினம் முறையிடப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.

அப்போது விஜய் மீதான சென்னை ஐகோர்ட்டு கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், “எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் ஐகோர்ட்டு கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடைபெற்றதும் விஜய் தப்பித்து ஓடியதாக அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது.

போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல் அடிப்படையில் தான் விஜய் அங்கிருந்து வெளியேறினார்; விஜய் அந்தப் பகுதியில் இருப்பது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் கூறினர். போலீசார் பாதுகாப்புடன் விஜய் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தவெக நிர்வாகிகளை போலீசார் அனுமதிக்கவில்லை.

கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. சுப்ரீம்கோர்ட்டே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அந்த விசாரணை மீது நம்பிக்கை குறைவாகவேஉள்ளது. அதற்காகத்தான் சுப்ரீம்கோர்ட்டு அமைக்கும் சிறப்பு விசாரணை குழுவை கேட்கிறோம்

கரூர் வழக்கில் த.வெ.க-வோ, விஜய்யோ எதிர்மனுதாரராக இல்லாத போது எதற்காக எங்களை பற்றி ஐகோர்ட்டு அவதூறு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்?.. வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜய்யின் தலைமைப்பண்பு குறித்தெல்லாம் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு மதுரை அமர்வுக்கு பதில் சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது ஏன்?.. ஐகோர்ட்டு மதுரை அமர்வு வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம்?.. ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்? ” என்று கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பதில் அளிக்கையில், “சென்னை ஐகோர்ட்டுதான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை. அஸ்ரா கார்க், சிபிஐயிலும் பணியாற்றி உள்ளார். 

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை முறையாக நடைபெறுகிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். விசாரணைக் குழுவின் அதிகாரிகள் ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டனர், அரசால் அல்ல. வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து எப்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது? என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது. 

இதனிடையே கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சென்று விஜய் பார்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், “அவர் சென்றாரா இல்லையா என்பது தற்போது தொடர்பில்லாதது” என்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்