45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் புனித நீராடினர்

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.;

Update:2025-02-26 19:41 IST

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் இடமே திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. 3 நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் புனித நீராடுவது என்பது மிக மிக புனிதமானது என்ற மரபு உள்ளது. இது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

கும்பமேளா நடைமுறையை ஏற்படுத்தியவர் ஆதி சங்கரர் என்று கூறப்படுகிறது. நாடு தழுவிய அளவில் மடாதிபதிகளும், துறவிகளும் கூடும் சங்கமாக கும்ப மேளாவை அவர்தான் உருவாக்கியதாக சொல்கிறார்கள்.

கங்கையும், யமுனையும் நிலத்தடி நீராக சரஸ்வதியும் ஒன்றுகூடும் இடத்தில் பல மைல் தூரம் நடந்து சென்று மூழ்கி குளிப்பதன்மூலம் தங்களது முற்பிறவி பாவங்கள் தொலைகின்றன என்று காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் வடமாநில மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவதை மிகப்பெரிய கடமையாக கருதுகிறார்கள்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ம் தேதி பவுர்ணமி தினத்தன்று பிரயாக்ராஜ் கும்பமேளா புனித நீராடல் தொடங்கியது. கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2,100 கோடியும் உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கிடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இதற்காக ஒர் இடைக்கால நகரமே உருவாக்கப்பட்டது. 25 பகுதிகள், மக்கள் குளிப்பதற்காக 12 படித்துறைகள் உள்ளிட்டவை சுமார் 4 ஹேக்டர் நிலப்பரப்பில் (40 சதுர கி.மீ) உருவாக்கப்பட்டன. 23 சமையல் அறைகள்,1 லட்சத்து 50 ஆயிரம் கழிவறைகள், 11 மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் என்று எல்லாமே தயார் நிலையில் கடந்த 45 நாட்களாக எந்தவித பெரிய அசம்பாவிதம் இன்றி மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இதுவரையில் சுமார் 68 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும், பல்தர்களும் அலை அலையாக வந்தனர். 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா இனி எப்பொழுது நடக்கும் என்றால் அது 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மகா கும்பமேளா பொதுவாகவே அரசியலுக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. 1918-இல் நடந்த கும்பமேளாவில் அண்ணல் காந்தியடிகள் கலந்துகொண்டு புனித நீராடினார். 2001-இல் சோனியா காந்தி கலந்துகொண்டார். 1954 கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதோடு ஒப்பிடும்போது, 68 கோடி பேர் 45 நாள்களில் புனித நீராடப் பிரயாக்ராஜில் குவிந்தும்கூடப் பெரிய அசம்பாவிதங்கள் இல்லாமல் மகா கும்பமேளா நிறைவடைந்திருக்கிறது .

கும்பமேளாவை பிரதமர் மோடி ஒற்றுமைக்கான மகா யாகம் என்று வர்ணித்து உள்ளார். உலகில் மிக அதிக அளவில் பக்தர்கள் அமைதியாக ஒருங்கிணையும் திருவிழா என்று யுனோஸ்கோ அறிவித்துள்ளது.

கும்பமேளாவில் நடந்த வினோத நிகழ்வுகள், அசம்பாவிதங்கள்,

மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசை (தை அமாவாசை) நாளான கடந்த 29-ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, பிப்ரவரி 15 அன்று டெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்குச் செல்லக் காத்திருந்த பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

கும்பமேளாவில் பெரிய முகாம்களும் அவற்றில் ஏராளமான சிறுசிறு பந்தல் குடிசைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்க வரும் சாதுக்களும், பக்தர்களும் தங்குவது வழக்கம். அந்தவகையில் அங்கு இருந்த சில குடிசை பகுதிகளில் எதிர்பாராத விதமாக ஒரு சில இடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. அது அவ்வபோது உடனடியாக தீயணைப்பு வீரர்களால் அணைக்கப்பட்டு பெரும் அசாம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

மகா கும்பமேளாவில் புனித நீராட நேரில் வர முடியாதவர்கள் போட்டோவை அனுப்பினால் அதனை நீரில் நனைப்பதாகவும் அதனால் புண்ணியம் சேரும் எனவும் இதற்காக 1,100 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பிறகு மகா கும்பமேளா தண்ணீரை உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அங்குள்ள 90 ஆயிரம் கைதிகளை புனித நீராட வைத்தனர். மகா கும்பமேளா புனித நீர் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, மகா கும்பமேளாவுக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் புனித நீராடிய நிலையில் அவருடைய கணவரால் வர முடியவில்லை. இதனால் அவருடைய கணவர் வீடியோ கால் செய்த போது அப்படியே செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகியது. இதனை சமூக வலைதளங்களில் ஒருதரப்பு வரவேற்றும் இன்னொரு தரப்பு விமர்சனம் செய்து இருந்தனர்.

முக்கிய பிரபலங்கள் நீராடல்

இந்த மகா கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமார்,, மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள், கிரிக்கெட் வீரர்கள், உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் நீராடினர்.

ஒரே நாளில் வைரலான இளம்பெண்

மகா கும்பமேளா நிகழ்வில், அழகான சொக்க வைக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசி மணி விற்கும் 16 வயது இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார்.

 பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த நிலையில், நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கான விமானக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடந்தது. தவிர, ரெயில்களின் ஏசி பெட்டிகளில் கண்ணாடி உடைப்பு சம்பவங்களும் அரங்கேறின.

மகா கும்பமேளா நிறைவு விழாவையொட்டி பிரயாக்ராஜிக்கு 350 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

கும்பமேளாவால் சிரமப்பட்ட உள்ளூர்வாசிகள்

கும்பமேளாவிற்குச் சென்ற பக்தர்களால் பிரயாக்ராஜ் நகர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. குறிப்பாக, பிப்ரவரி 9-ம் தேதி 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகன நெருக்கடி ஏற்பட்டது. பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்து நின்றது பேசுபொருளானது.

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் 2 மாதங்களாக எங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கிறோம். எப்போது கூட்டம் தீரும் என்று காத்திருக்கிறோம். 2 கி.மீ போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிலிருந்து வெளிவர ஒரு மணி நேரம் ஆனது. கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வரவேண்டாம். கங்கையும், திரிவேணி சங்கமும் எங்கும் சென்றுவிடாது. பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள். கூட்டம் குறைந்த பின்னர் நீங்கள் அமைதியாக வந்து நீராடலாம் என்று கூறி இருந்தனர்.

திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா

திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்தன. அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உபி அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநத் மறுத்திருந்தார்.

கும்பமேளாவை விமர்சித்த அரசியல் கட்சி தலைவர்கள்

மகா கும்பமேளா விழா ஏற்பாடுகள் மற்றும் விபத்துகள் குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜோஷிமத்தின் சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த் சரஸ்வதி, சமாஜ்வாதியைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும் , மக்களவை எம்பியுமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

வைரலான பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், மகா கும்பமேளாவில் நீராடியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இணையத்தில் அதுகுறித்து உண்மைச் சம்பவங்களும் சரிபார்க்கப்பட்டன. உண்மையில், அப்படம் ஏஐ தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது என ஊடகங்களும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், அந்தப் புகைப்படம் போலியானது என்று பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவில் திரண்ட சாதுக்கள், அகோரிகள்

 

கும்பமேளாவில் உடல் முழுவதும் திருநீறுடன் நாக சாதுக்கள், அகோரிகள், துறவிகள் மடாதிபதிகள், மண்டை ஓடு மாலையும், கையில் சூலாயுதம், வாள் ஏந்திய அகோரிகள் திரளாக வந்து புனித நீராடினர். இவர்கள் இமயமலை, காசி, வாரணாசி ஆகிய இடங்களில் தான் வசிப்பார்கள். இவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கவும் பார்க்கவும் பக்தர்கள் குவிந்தது மெய் சிலிர்க்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்