மணிப்பூர்: உயிரிழந்த 'ஏர் இந்தியா' விமான பணிப்பெண் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

விமான பணிப்பெண் சிங்சனின் உடல் மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.;

Update:2025-06-20 09:17 IST

இம்பால்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் விமானம் விபத்திற்குள்ளான சமயத்தில் விடுதி கட்டிடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விமான விபத்தில் மணிப்பூரை சேர்ந்த விமான பணிப்பெண் லாமுன்தெம் சிங்சன்(வயது 26) என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிங்சனின் உடல் மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. திமாபூர் விமான நிலையத்தில் இருந்து காங்போக்பி பகுதி வரை சிங்சனின் உடலுக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

விமான விபத்தில் உயிரிழந்த லாமுன்தெம் சிங்சன், மணிப்பூரின் குக்கி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது குடும்பத்தினர் இம்பாலில் உள்ள லாம்புலேன் காலனியில் வசித்து வந்த நிலையில், 2023-ம் ஆண்டு நடந்த கலவரத்தை தொடர்ந்து அவர்கள் காங்போக்பி பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இந்த விமான விபத்தில் மணிப்பூரின் மெய்தி இனத்தை சேர்ந்த மற்றொரு விமான பணிப்பெண் கந்தோய் சர்மா என்பவரும் உயிரிழந்தார். அவரது உடல் விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்