திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்றது.;
காந்தி நகர்,
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்திய எல்லையோரம் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் போபட் குமார் (வயது 24). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கவுரியும் (வயது 24) காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனிடையே, இருவரின் காதலுக்கும், இருவரும் திருமணம் செய்யவும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று இரவு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருவரும் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் ரபர் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
அப்போது எல்லையில் பாதுகாப்புப்பணியில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் காதல் ஜோடியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக காதல் ஜோடி கூறியுள்ளனர். இதையடுத்து காதல் ஜோடியை எல்லைப்பாதுகாப்புப்படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.