பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு
கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். மேலும், கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர், கட்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பும் எங்கள் பாதிப்புதான். தாக்குதலில் அதிக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். குறைவான சேதமடைந்த வீடுகளுக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
ஜம்மு-காஷ்மீர் பிரிவிற்கு கூடுதலாக 2 எல்லைப்பாதுகாப்புப்படை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் படைப்பிரிவுகள் 2 உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. எல்லைப்பகுதியில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ. 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.