முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.;

Update:2025-05-11 11:24 IST

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், திடீரென்று டிரோன்களை ஏவின. அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது.

காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருநாட்டு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் சவுகான், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளிடம் பிரதமர் கேட்டறிகிறார். பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 3-வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்