ஒடிசாவில் ஓராண்டில் பலாத்கார சம்பவங்கள் 8 சதவீதம் அதிகரிப்பு; பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பூஜ்ய சகிப்பு தன்மையுடனான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என சமந்த்சிங்கார் வலியுறுத்தினார்.;
கட்டாக்,
ஒடிசாவில், காதலனுடன் கடற்கரையோரம் பேசி கொண்டிருந்த 20 வயது இளம்பெண் ஒருவர், 4 சிறார்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிஜு ஜனதா தள பெண் தலைவரான லேகாஸ்ரீ சமந்த்சிங்கார் கூறும்போது, ஒடிசாவில் ஒரு துரதிர்ஷ்டவச மற்றும் தீவிர சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. அதிகாரத்திற்கு வந்த பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஓராண்டில், ஒடிசாவில் பலாத்கார சம்பவங்கள் 8 சதவீதம் அதிகரித்துள்ளன என கூறியுள்ளார்.
ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எதனையும் செய்யவில்லை. அதன் சாதனைகளை பற்றியே பேசி கொண்டிருக்கிறது. அடிமட்ட அளவிலான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அரசு ஏன் அமைதி காக்கிறது? அவர்கள் அரசின் ஓராண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மந்திரியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு முழு பொறுப்பேற்று, அவர் பதவி விலக வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பூஜ்ய சகிப்பு தன்மையுடனான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.