உக்ரைனியர்களை ரஷியாவாலும், பாலஸ்தீனர்களை இஸ்ரேலாலும் அழிக்க முடியாது - ப.சிதம்பரம்
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததில் இருந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இஸ்ரேல் காசா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க ஜனாதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சமீபமாக 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார். இதனிடையே இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தநிலையில், உக்ரைனில் வாழும் உக்ரைனியர்களை ரஷியாவாலோ, காசா மற்றும் பாலஸ்தீனத்தில் வாழும் பாலஸ்தீனர்களை இஸ்ரேலாலோ அழித்துவிட முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அதிக அளவில் மக்களைக் கொல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இறுதியாாகக் கண்டுபிடித்துள்ளார். புதினுக்கு எது பொருந்துமோ அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் பொருந்தும். உக்ரைனில் வாழும் அந்நாட்டவர்களை ரஷியாவால் அழித்துவிட முடியாது. அதேபோல், பாலஸ்தீனியரை அவர்கள் தாய் மண்ணிலிருந்து இஸ்ரேலால் அழிக்க முடியாது. 2300 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இதனைச் சொன்னார்:
சிறைநலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
(பொருள்: கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்) என தெரிவித்துள்ளார்.