டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தொழிலாளர் மிகுந்த துறைகளான ஜவுளி, தோல், காலணிகள் மற்றும் இறால் போன்ற பொருட்களின் ஏற்றுமதி முடங்கி இருக்கிறது.
இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதுடன், வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஏற்றுமதியை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்து இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் 11 காசுகள் உயர்ந்து, ரூ.87.58 ஆக முடிவடைந்தது. ஆனால் நேற்று இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு வெளியேறியது ஆகிய காரணங்களால், ரூபாய் மதிப்பு ஒரேயடியாக 61 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல் முறையாக ரூ.88-ஐ தொட்டது. ரூ.88.19 ஆக முடிவடைந்தது.
50 சதவீத வரி விதிப்பு, தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவை இந்த சரிவுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.