மண்சரிவால் ரெயில் பாதியில் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
சுமார் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.;
கோப்புப்படம்
பெங்களூரு,
திருநெல்வேலியில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு திங்கட்கிழமைகளிலும், அதேபோல் ஜாம்நகரில் இருந்து மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜாம்நகரில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூரு ரெயில் நிறையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது முன்னரே நிறுத்தப்பட்டது.
ரெயில் நிறுத்தப்பட்டு சுமார் 7 மணி நேரம் ஆகியும் ரெயில் புறப்படவில்லை. இதனால் ரெயிலில் இருந்த தமிழக பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனிடையே பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெங்களூரு செல்லும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த மண் சரிவால் ரெயில் தண்டவாளம் சேதமடைந்ததால் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் நிறுத்தத்தால் ரெயிலில் பயணம் செய்த தமிழர்கள் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் ரெயில் சுமார் 7 கிலோ மீட்டர் பின்னோக்கி இயக்கப்பட்டது. இந்த ரெயிலை மாற்றுப்பாதையில் திருப்பிவிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டதால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.