தங்கையை திருமணம் செய்ய மறுத்ததால் மைத்துனரின் மர்ம உறுப்பை துண்டித்த பெண்

தனது தங்கையின் நிலையைக் கண்ட மஞ்சு ஆத்திரத்தில் உமேசை பழிவாங்க எண்ணினார்.;

Update:2025-10-21 09:24 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வசித்து வருபவர் உமேஷ்(வயது 22). இவரது அண்ணனின் மனைவி மஞ்சு. இந்த நிலையில் மஞ்சுவின் சகோதரிக்கும், உமேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு உமேசின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் பேசி முடிவு செய்தனர். இதை அறிந்த மஞ்சுவின் தங்கை அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனவேதனையில் அவர் செய்வதறியாது திகைத்துப்போய் இருந்தார். அவர் உமேசை சந்தித்து தன்னை திருமணம் செய்யக்கோரி பேசினார். ஆனால் அதற்கு உமேஷ் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தனது தங்கையின் நிலையைக் கண்ட மஞ்சு ஆத்திரத்தில் உமேசை பழிவாங்க எண்ணினார். இதற்காக அவர் தக்க சமயம் பார்த்து காத்திருந்தார். கடந்த 16-ந் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மஞ்சு நள்ளிரவில் எழுந்து உமேசின் அறைக்கு சென்றார். அங்கு உமேஷ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் கத்தியால் அவரது மர்ம உறுப்பை வெட்டி துண்டித்தார்.

மேலும் அதை அங்கு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் உமேஷ் அலறி துடித்தார். அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்ட குடும்பத்தினர் விழித்தெழுந்து ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு உமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்ததையும், அவரது மர்ம உறுப்பு அங்கே துண்டித்த நிலையில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த உமேஷ் தற்போது உடல்நிலை தேறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பிரயாக்ராஜ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மஞ்சுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்