போட்டியில் பங்கேற்க வைத்து பதக்கம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த யோகா மாஸ்டர்
யோகா போட்டியில் பங்கேற்க வைத்து பதக்கம் வாங்கி தருவதாக ஆசைகாட்டி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.;
ஆர்.ஆர்.நகர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்) போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு யோகா பயிற்சி மையம் உள்ளது. இதனை கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து நிரஞ்சனாமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவர் கர்நாடக யோகா சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் நிரஞ்சனா மூர்த்தியின் யோகா மையத்திற்கு கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமி யோகா பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார். கடந்த 2023-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற யோகா போட்டியில் பங்கேற்க அந்த சிறுமியை நிரஞ்சனாமூர்த்தி அழைத்து சென்றிருந்தார்.
அப்போது சிறுமிக்கு 17 வயதாகி இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தாய்லாந்து நாட்டில் வைத்து சிறுமிக்கு நிரஞ்சனாமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, யோகா மையத்திற்கு செல்வதை சிறுமி நிறுத்தி விட்டார். பின்னர் கடந்த ஆண்டு (2024) மற்றொரு யோகா பயிற்சி மையத்தில் சிறுமி யோகா கற்க சேர்ந்திருந்தார்.
ஆனால் அந்த யோகா மையத்தையும் நிரஞ்சனாமூர்த்தி தான் நடத்தியுள்ளார். அதுபற்றி முதலில் சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது. அப்போது சிறுமியிடம் சர்வதேச அளவில் நடக்கும் யோகா போட்டியில் பங்கேற்க வைத்து, பதக்கம் வாங்கி தருவதாக நிரஞ்சனா மூர்த்தி கூறியுள்ளார். இந்த பதக்க ஆசைகாட்டி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் கூட பயிற்சி மையத்தில் வைத்து சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுபற்றி சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்தும், தங்கள் மகளை யோகா மாஸ்டரான நிரஞ்சனாமூர்த்தி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும், தாய்லாந்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாகவும் கூறி ராஜாரஜேஸ்வரி நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், சிறுமியை தொடர் பலாத்காரம் செய்ததாக கூறி யோகா சங்க செயலாளரான நிரஞ்சனாமூர்த்தியை ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் கைது செய்தனர். அவர் யோகா பயிற்சிக்கு வந்த மேலும் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நிரஞ்சனாமூர்த்தியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.