தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு - நீர்வளத்துறை தகவல்
அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 93.31 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையால் நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில், மேட்டூர், பவானிசாகர், பெரியாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி. இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.
தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து, 185.958 டி.எம்.சி. அதாவது 82.91 சதவீதம் தண்ணீர் கையிருப்பில் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகிக்க முடிகிறது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 93.31 டி.எம்.சி, ஈரோடு பவானிசாகரில் 27, கோவை பரம்பிக்குளத்தில் 12.87, சேலையாறு 4.98, சாத்தனூர் 4.85, பெரியாறு 4.69, வைகை 4.51 டி.எம்.சி. அதிகபட்சம் இருப்பு உள்ளது. பருவமழை மூலம் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 422 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 1,028 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. 1,716 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. அதேபோல், 3 ஆயிரத்து 543 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 5 ஆயிரத்து 178 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. 2,254 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 1,340 நீர் நிலைகளில் 700 நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. சிவகங்கையில் உள்ள 1,459 நீர் நிலைகளில் 522 நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. அதேபோல் நெல்லையில் உள்ள 780 நீர் நிலைகளில் 194 நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. அரியலூரில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.