வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது
போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.;
தூத்துக்குடி, சிலுவையார் கெபி தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் செல்லையன் (வயது 73) என்பவர் கடந்த 8.6.2025 அன்று தனது மனைவியுடன் திருவனந்தபுரம் ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த 32 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.24,500 பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கில்பர்ட் செல்லையன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல்(33), ராஜூவ்நகரை சேர்ந்த ரவி மகன் கண்ணன்(22), பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கடல் ராஜா மகன் அரவிந்த்(22) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த பாலா மகன் மோகன்(34) ஆகியோர் சேர்ந்து மேற்சொன்ன கில்பர்ட் செல்லையன் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
உடனே மேற்சொன்ன போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இதேபோன்று கடந்த 19.4.2025 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்வென்ட் ரோடு பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 14 ¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன போலீசார் அந்த 4 பேரிடமிருந்து இரண்டு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.