சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்: பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.;

Update:2025-12-10 13:05 IST

சென்னை,

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம்.அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும், இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.

மு.க.ஸ்டாலின் அவர்களே அன்றைக்கு சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே அழைந்தீர்கள். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது நீங்கள் எப்படி அழைவீர்கள் என்று தெரியவில்லை.இன்றைக்கு எதிர்க்கட்சிகளும், ஏன் தி.மு.க.வால் கூட அ.தி.மு.க. ஆட்சியை குறைசொல்ல முடியவில்லை. பொற்கால ஆட்சியை கொடுத்தோம். அதே ஆட்சி மீண்டும் அமைய நீங்கள் அத்தனை பேரும் உதவ வேண்டும். இங்குள்ளவர்கள் நினைத்தால் நிச்சயம் அது நிறைவேறும். நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

இப்படிபட்ட இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்வது கேளிக்கூத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஒரு மாதிரி வாக்களிப்பார்கள். சட்டசபை தேர்தலில் வேறு மாதிரி வாக்களிப்பார்கள். இன்று பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சேர்த்து வாங்கிய வாக்கு 41.33 சதவீதம் ஆகும். 84 சட்டசபை தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியுள்ளோம். 15 சட்டசபை தொகுதிகளில் 1 சதவீதம் அளவுக்குத்தான் வாக்கு குறைந்தது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். 2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்பு வெளியிட்டனர். பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால், பெரும்பாலானவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நல்ல பல திட்டங்களை இப்போது நிறுத்திவிட்டார்கள். அதுதான் திமுகவின் சாதனை. பெண்களுக்கு ரூ.1000 கொடுப்போம் என்று அறிவித்தார்கள். சட்டசபையில் அதிமுக வலியுறுத்திய பிறகு அதை திமுக அரசு கொடுத்தது. வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து கொடுத்தனர்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக அரசாங்கம் விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்க இருக்கிறது. நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் வாங்கிக்கொள்வார்கள். ஆனால், ஓட்டு அதிமுகவுக்குத்தான் போடுவார்கள்.இப்போது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அறிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக சட்டசபையில் இதை அதிமுக வலியுறுத்தியது. மக்களிடம் செல்வாக்கை இழந்ததால், அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இப்போது 10 லட்சம் லேப்டாப் தருவதாக கூறியுள்ளனர். மாணவர்கள் நலனுக்காக கொடுக்கவில்லை. தேர்தலுக்காக கொடுக்கிறார்கள். அதை உரிய நேரத்தில் கொடுக்கவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுக்கு விரோத அரசு தி.மு.க., டெல்டா விவசாயிகள் விளைந்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால், அதை வாங்கவில்லை. சாலையோரம் குவித்து வைத்த நெல் தொடர் மழையால் முளைத்துவிட்டது.நான் உடனே நேராக சென்று சந்தித்தேன். 15 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் கொள்முதல் செய்யவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். ஆக, விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளிய அரசு தி.மு.க. அரசு.

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. இப்படி அவல ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்திவிட்டார்கள். வீட்டு வரி 100 சதவீதம் உயர்வு. இப்படி எல்லா வரியும் உயர்ந்துவிட்டது.

உடல் உறுப்பை விற்று குடும்பம் நடத்தும் அவலநிலை திமுக ஆட்சியில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிட்னி முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன வேறுபாடு என்பதை நீங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இன்றைக்கு அமலாக்கத்துறை திமுக ஊழல் குறித்து விசாரிக்கிறது. முதல் முறையாக ஒருவர் உள்ளே போகப்போகிறார். படிப்படியாக எல்லோரும் உள்ளே போவார்கள். திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறாத துறையே இல்லை. ஊழல் என்றால் திமுக. திமுக என்றால் ஊழல்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உண்மை குற்றவாளிகளை நாட்டுக்கு அடையாளம் காட்டுவோம். இன்றைக்கு எஸ்.ஐ.ஆரை பார்த்து அலறுகிறார்கள். ஏனென்றால், கள்ள ஓட்டு போட்டுத்தான் ஆட்சிக்கு வந்தார்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதில் என்ன தவறு.

அதிமுக என்றைக்கும் யாருக்கும் அடிமை இல்லை. 1999-ல் இதே திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தது. இன்றைக்கு நாம் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி கூட்டணி என்கிறார்கள்.எல்லா கட்சியும் கூட்டணி வைப்பது இயல்பு. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறுபடும். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்க முடியவில்லை. எப்போதும் நம்மை அடிமை என்கிறார்கள். நீங்கள்தான் அடிமை. காங்கிரஸ் ஆட்சியில் அண்ணா அறிவாலய மேல்தளத்தில் சிபிஐ சோதனை நடந்தது. கீழ்த்தளத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. மிரட்டி பணியவைத்தார்கள். நீங்கள்தான் அடிமை.

திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின். இப்போது உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர துடிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். கட்சிக்காக உழைத்தால் யாரும் பதவிக்கு வர முடியும். திமுக போல வாரிசு அரசியல் கிடையாது. உழைப்பவர்களுக்கு இடம் உண்டு. அவர்கள் எம்.எல்.ஏ.வாக வருவார்கள்.இங்கே வந்த பல நிர்வாகிகள் வேட்பாளராக வர வாய்ப்பு உள்ளது. எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.திமுக அரசு எவ்வளவோ கொள்ளையடித்து வைத்துள்ளது. இந்த தைப்பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்குங்கள்.

2026-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். அதிமுக சொந்த பலம் உள்ள கட்சி. திமுக பலம் இழந்த கட்சி. அதனால்தான் கூட்டணியை நம்பி நிற்கிறார்கள். நாம் சுதந்திரமான கட்சி. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்போம். தேர்தலுக்கு முன்பு அருமையான கூட்டணி அமையும். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்