ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.;
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல்- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து வரும் 28, அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06034) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து வரும் 29, அப்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு ரெயில் (06033) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அன்று இரவு 10.35 மணியளவில் கோவையை சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.