கோவை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.;
கோப்புப்படம்
கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை ஆசாமிகள், மாணவியின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆடையில்லாமல் மயக்க நிலையில், மாணவியை மீட்டுள்ளனர். மரியாதைக்கு பெயர் பெற்ற, நாகரிக நகரான கோவையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் பெற்றோர் மனம் பதைபதைத்த நிலையில் உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் என்பது இன்னமும் தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது.
2013-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளத்தில் ஒரு பெண் கற்பழித்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து கனிமொழி பெரிய போராட்டம் நடத்தினார். கரூரில் 41 பேர் பலி சம்பவத்தில், இரவோடு இரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். முதல்- அமைச்சரும், கனிமொழியும் கோவை சம்பவம் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.
கோவையில் கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கிறது. போதைக்கு 2-வது தலைநகரமாக கோவை உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் வரை 18,200 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. 6 ஆயிரம் கொலை குற்றங்கள், 31 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளது.
பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை வீடியோ மூலம் வேண்டுகோள் விடுப்பது சரியா?. காவல்துறை நடவடிக்கை சரியில்லை. இரவிலும் ரோந்து செல்வதில்லை.
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் துணை ஜனாதிபதி பாதுகாப்பில் குறைபாடு இருந்தது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி 2 பேர் அத்துமீறி நுழைந்தனர். காவல்துறையின் மெத்தன போக்குதான் இதற்கு காரணம். கோவையில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் நாளை (அதாவது இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அவர் கூறினார்.
பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கூறுகையில், “கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது. கோவைக்கு படிப்பு மற்றும் வேலைக்கு பெண்களை அனுப்பும் பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக பெரிய குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது, அது தொடர்பானவர்களை பிடித்து சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்காமல் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லும் சம்பவம் அரசின் மனநிலையில் உள்ளது. இது சரியான செயல் அல்ல. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது” என்று அவர் கூறினார்.