ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வாட்ஸ்அப்பில் பேராசிரியருக்கு குறுந்தகவல் வந்துள்ளது.;

Update:2025-11-29 19:03 IST

கோப்புப்படம் 


திண்டுக்கல் டெலிபோன் காலனியை சேர்ந்தவர் எபினேசர் (70 வயது). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எபினேசரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தாங்கள் கூறும் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த குறுந்தகவலை எபினேசர் பார்த்த சில நிமிடங்களில் அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்துக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.

இதை உண்மை என நம்பிய எபினேசரும், அந்த செல்போன் செயலியை பதிவிறக்கும் செய்து, அதன் மூலம் ரூ.2 லட்சம், ரூ.4 லட்சம் என அடுத்தடுத்து செலுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அதிக வருமானம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த எபினேசர் ரூ.45 லட்சத்து 40 ஆயிரம் வரை முதலீடு செய்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் முதலீடு செய்த தொகை மற்றும் லாபத்துடன் சேர்த்து ரூ.1 கோடியே 25 லட்சம் அவருடைய கணக்கில் இருப்பதாக அந்த செல்போன் செயலியில் காண்பித்தது. பின்னர் அவர் தனது தேவைக்கு பணம் எடுக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து வாட்ஸ்அப்பில் தன்னுடன் பேசியவர்களை அவர் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததுடன், மேலும் பணத்தை அந்த செயலி மூலம் முதலீடு செய்யும்படி வலியுறுத்தினர்.

சிறிது நேரத்தில் அந்த செல்போன் செயலியும் முடங்கியது. அப்போதுதான் மர்ம நபர்கள், பண மோசடி செய்தது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசில் அவர் புகாரளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரை பண மோசடி செய்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்