தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதற்கான வலிமை அ.தி.மு.க.விடம் இல்லை: பெ.சண்முகம் பேட்டி
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லை என பெ.சண்முகம் தெரிவித்தார்;
ஓசூர்,
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
தேர்தல் நெருங்குவதால் கருத்து கணிப்புகள் வரலாம். அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத, நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய கருத்து கணிப்புகளும் வரலாம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த 3 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எங்களது கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லை. அ.தி.மு.க. ஒன்றிணைந்தாலும் தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதற்கான வலிமை அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அவர்கள் பா.ஜனதாவுடன் இணைந்து இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுருங்கி உள்ளது.
பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர். மாநில உரிமைகளை பறித்து அனைத்து விதத்திலும் பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு எதிராகவே செயல்படுகிறது.
இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.