போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவும் திமுக அரசு: எல்.முருகன் சாடல்
போராடும் மக்கள் மீது திமுக அரசு காவல்துறையை ஏவுவதாக எல்.முருகன் சாடியுள்ளார்.;
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி அப்பாவி மக்களை மிரட்டுகிறார்.
"ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் முதல்-அமைச்சரோ, தனது கட்சி படை பரிவாரங்களுடன் விளம்பர ஸ்டண்ட் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார். பட்டாசு ஆலையில் நடக்கும் விபத்துகளை தடுக்க திராணியற்ற முதல்-அமைச்சருக்கு, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை வைத்து இறந்தவர்கள் குடும்பத்தினரை மிரட்ட மட்டும் தெரிகிறது.
தமிழக காவல்துறையின் இது போன்ற செயல்களுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடக அரசியலை விட்டு விட்டு, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக செயல்பட முன்வர வேண்டும். தமிழக மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது இதை மட்டும் தான். இல்லையென்றால், நாளை வாக்கு கேட்க வரும் பொழுது மக்கள் ஓரணியில் திரண்டு இதே பாணியில் பதில் சொல்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.