எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி: தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை

அ.தி.மு.க. விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.;

Update:2025-02-12 11:49 IST

ஈரோடு,

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் சின்ன ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என்கிற எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.

ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அக்கட்சியில் இருந்து வருகிறார். மேலும் இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும். தற்போது கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா கடந்த 9-ந் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவில்லை.

இதனிடையே கோபி அருகே குள்ளம்பாளையம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திடீரென்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதாவது 2 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தநிலையில் அவரது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தற்போது அவரைக்காண அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குவிந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்