ஈரோடு இரட்டை கொலை; காவல்துறை துரித நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை அச்ச நிலைக்கு தள்ளிய தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த உடனேயே அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் 8 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.